Monday

அவா வறுத்தல்

முப்பத்து நான்காம் அதிகாரம் - அவா வறுத்தல்
அஃதாவது, ஆசையை ஒழித்தல்.

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து. (331)

பொருள்: அவா எல்லா உயிர்க்கும் எ ஞான்றும் தவா(த) பிறப்பு ஈனும் வித்து - ஆசை எல்லா உயிர்களுக்கும் எந் நாளும் கெடாத பிறப்பினைக் கொடுக்கும் வித்து.

அகலம்: ‘என்ப’ அசை. அளபெடை ஈண்டு இசை நிறைக்க வந்தது.

கருத்து: பிறப்புக்கு வித்து அவா.

வேண்டுங்கால் வேண்டல் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (332)

பொருள்: வேண்டுங்கால் பிறவாமை வேண்டல்- (ஒருவன்) விரும்புங்கால் பிறவாமையை விரும்புக ; அது வேண்டாமை வேண்ட வரும் - பிறவாமை விரும்பாமையை விரும்ப வரும்.

அகலம்: ‘மற்று’ அசை. விரும்பாமையாவது, உலகப் பொரு ளொன்றையும் விரும்பாதிருத்தல். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வேண்டுங்கால் வேண்டும்’. வேண்டும் என்பது பொருத்தமான பொருளைத் தாராமையானும், ‘வேண்டல்’ என்பதே பொருத்தமான பொருளைத் தருதலானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: அவா இல்லார்க்குப் பிறப்பு இல்லை.

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில். (333)

பொருள்: வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை - விரும்பா மையை ஒத்த மேலான செல்வம் இவ் வுலகில் இல்லை ; யாண்டும் அஃது ஒப்பது இல் - (வேறு) எவ் வுலகிலும் விரும்பாமையை ஒத்த (மேலான) செல்வம் இல்லை.

அகலம்: நச்சர், பரிமேலழகர் பாடம் ‘ஆண்டும்’. மற்றை மூவர் பாடம் ‘யாண்டும்’.

கருத்து: அவா இல்லாமைக்கு ஒப்பான செல்வம் எங்கும் இல்லை.

தூஉய்மை யயன்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். (334)

பொருள்: தூய்மை என்பது அவா இன்மை - தூய்மை என்று (சிறப்பித்துச்) சொல்லப்படுவது ஆசை யில்லாமை; அது வாய்மை வேண்ட வரும் - ஆசை யில்லாமை வாய்மையைக் கைக் கொள்ள வரும்.

அகலம்: வேண்ட என்பதனைக் கொள்ள என்னும் பொருளிற் கூறினார். மற்று என்பது அசை.

கருத்து: அவா வின்மை அகத் தூய்மையை நல்கும்.

அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர். (335)

பொருள்: அவா அற்றார் அற்றவர் என்பார் - ஆசையினின்று நீங்கினார் (பிறப்பு) அற்றவர் என்று சொல்லப்படுவர் ; மற்றையார் அற்றாக அற்றது இலர் - ஆசையை நீங்காதார் அத்தன்மையாக (ப் பிறப்பு) நீங்கினமை இலர்.

அகலம்: தாமத்தர், நச்சர் பாடம் ‘அற்றவ ரென்பர்’. ‘அவா’ ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: அவா வற்றவரே பிறப் பற்றவர்.

அஞ்சுவ தோரு மவாவே யயாருவனை
வஞ்சிப்ப தோரு மவா. (336)

பொருள்: அவா ஒருவனை வஞ்சிப்பது - ஆசை ஒருவனை வஞ்சிப்பது; அவாவே அஞ்சுவது -ஆகலான்) அவாவே அஞ்சத் தக்கது.

அகலம்: ‘ஓரும்’ இரண்டும், ஏகாரமும் அசைகள். தாமத்தர் பாடம் ‘அஞ்சுவ தோரு மவாவே’. நச்சர் பாடம் ‘அஞ்சுவ தோரு மறிவே’. தாமத்தர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: அவாவினை விடுதலே மக்கள் கடமை.

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (337)

பொருள்: அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவன்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா(த)வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும்.

அகலம்: கெடாத வினைகள் - அறங்கள்

கருத்து: அவாவினை விட்டார் அறங்களைப் புரிவர்.

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும். (338)

பொருள்: அவா இல்லார்க்கு துன்பம் இல்லாகும் - ஆசை இல்லாதார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டேல் தவாது மேன்மேல் வரும் - ஆசை உண்டாயின் (துன்பம்) கெடாது மேல் மேல் வரும்.

அகலம்: ‘ஆசைப் படப்பட வாய்வருந் துன்பங்கள்’ - திருமந்திரம்

கருத்து: அவா இல்லார்க்குத் துன்பம் இல்லை.

இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின். (339)

பொருள்: அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் -ஆசை என்னும் துன்பத்துள் மிகுந்த துன்பம் அழியின், இன்பம் இடை அறாது ஈண்டும் - இன்பம் இடையில் நீங்காது பெருகும்.

அகலம்: அவா என்னும் காரணத்தைத் துன்பம் என்னும் காரியமாக உபசரித்தார்.

கருத்து: அவா இல்லார் இன்பம் அடைவர்.

ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும். (340)

பொருள்: ஆரா(த) இயற்கை அவா நீப்பின் -நிரம்பாத இயல்பை யுடைய ஆசையை நீக்கின், அ நிலையே பேரா(த) இயற்கை தரும்- அந் நிலைமையே (என்றும்) ஒரே தன்மையான இயல்பினைத் தரும்.

அகலம்: அவாவை நிறைவேற்ற நிறைவேற்ற அது வளர்ந்து கொண்டே போகும் இயல்பிற் றாகலின், ஆரா வியற்கை அவா என்றார். அந் நிலைமை, அவாவை நீத்த நிலைமை. ஓரே தன்மையான இயல்பாவது, பிறப்பின்றி என்றும் ஒரு படித்தா யிருக்கும் நிலைமை. பேராத - வேறுபடாத -ஒரே தன்மையான.

கருத்து: அவாவினை விட்டார்க்குப் பிறப்பு இறப்பு இல்லை.

வீட்டியல் முற்றிற்று.

No comments:

Post a Comment