Monday

பதிப்புரை


தமிழகத்தில் மயிலாடுதுறையில் 2010 சனவரி 24 ஆம் நாள் அமைச்சர் உ.மதிவாணன் அவர்களாலும் சிங்கப்பூரில் தேசிய நூலகத்தின் ஆதரவிலும் சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் ஆதரவிலும் தமிழவேள் நற்பணி மன்ற ஆதரவிலும் 14.03.2010 அன்று வெளியிடப்பட்ட நூலின் அட்டை படம்.


2000 ஆண்டில் திரு. கவி அவர்களால் கையடக்கப்பதிப்பாக வெளியிடப்பட்ட வ.உ.சிதம்பரனார் உரை மற்றும் பாவேந்தர் உரை நூல்களின் அட்டை


வ.உ.சிதம்பரனார் நூலின் தொகுப்பாசிரியர் கவி அவர்களைச் சிறப்பிக்கிறார் சிங்கப்பூர் தமிழர் சங்கத் தலைவர்.



சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. கோவலங்கண்ணன் அவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்.



சிறப்புரையாற்றிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்பிக்கப்படுகிறார்.



சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.



திரு.கோவலங்கண்ணன் அவர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வழங்குகிறார்.






பதிப்புரை

மறைந்த என்னுடைய தந்தையார் அவர்கள் இந்து அறநிலைய ஆட்சித்துறை முதல் நிலை செயல்அலுவலராக இருந்தவர். எங்கள் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் உடன் பணியாற்றியவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். பொதுவுடைமை இயக்க சிந்தனை யுடையவர். தன்னுடைய கடைசி மகனுக்கு காரல் மார்க்ஸ் என்று பெயர் வைத்தவர். தமிழ் மீதும் பற்றுள்ளவர். எனவே தன்னுடைய ஒரே மகளுக்கு வள்ளுவனின் துணைவியாகக் கருதப்பட்ட வாசுகியின் பெயரை வைத்தார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற குறளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சிக்குத் திருக்குறள் முனுசாமி அவர்களை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். உடன்பாட்டின்படி அவருக்கு மூன்று நாள்கள் தான் சொற்பொழிவு. திருக்குறளாரின் ஆழ்ந்த புலமையினாலும் சொற் பெருக்கினாலும் ஈர்க்கப்பட்ட என் தந்தையார் அவருடைய சொற்பொழிவை மீண்டும் ஒரு மூன்று நாள்களுக்கு நிகழ்த்துமாறு கூறினார். அப்பொழுது என்னுடைய அகவை பதினொன்று அல்லது பனிரெண்டாக இருக்கும். எப்படியோ இந்நிகழ்வு என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.

பள்ளி வகுப்பு பாடப்பகுதியில் மனப்பாடப் பகுதியாக பத்து அல்லது பதினைந்து திருக்குறள்களைப் படித்தால் ஆறு மதிப்பெண்கள் உறுதி என்பதற்காக மட்டுமே பள்ளிகளில் திருக்குறளை மனப்பாடம் செய்தவன் நான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக முதல் பத்து அதிகாரங்களை மனப்பாடம் செய்து மூன்றாம் பரிசைப் பெற்றவன். இது தவிர வேறு எந்த ஈர்ப்பும் எனக்கு இல்லை.

சென்னையில் நான் பணியாற்றிய போது திருவல்லிக் கேணி பழைய பொத்தகக் கடையில் ‘வ.உ.சி. கட்டுரைகள்’ என்ற தலைப்பிடப் பட்ட ஒரு சிறு நூலைப் பார்த்தேன். அதில் ‘திருவள்ளுவரின் திருக்குறள்’ என்ற வ.உ.சி எழுதிய கட்டுரையைப் படித்த போதுதான் திருக்குறளுக்கு அவர் உரை எழுதிய செய்தி அறிய முடிந்தது.

அக்காலக்கட்டத்தில் தான் நான் பெரியார் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். வ.உ.சி. எழுதிய அக்கட்டுரையில் , ‘கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்கள் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல’ என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கான சான்று களையும் கூறியிருந்தார்.

அக்கட்டுரையையின் முதன்மையானவற்றைத் தொகுத்து 1000 படிகள் அச்சடித்து வெளியிட்டேன். மேலும் அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏடான ‘சங்கொலி’ வார இதழில், அதன் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு அவர்கள் ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதி வந்தார். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன. அதை வெளியிட்டு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினைப் படித்த போது திருக்குறளின் உண்மைப் பொருள் எனக்கு விளங்கப்பெற்றது.

‘பாவேந்தரின் திருக்குறள் உரை’ என்ற நூலையையும் தேடத் தொடங்கினேன். ச.சு. இளங்கோ அவர்கள் வெளியிட்ட அவருடைய ஆய்வுடன் கூடிய நூலை மதுரையில் கிடைக்கப் பெற்றேன். பின்பு புதுச்சேரியில் பணியாற்றிய போது ‘திராவிடர் பேரவை’ நிறுவுநர் திரு. நந்திவர்மன் அவர்களின் தங்கை செங்கமலத்தாயார் அவர்கள் வெளியிட்ட ‘பாவேந்தர் உரை’ என்ற நூலையும் வாங்கினேன்.

கோபிச் செட்டிப்பாளையம் வழக்கறிஞர் திரு. கு.ச. ஆனந்தன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்ற 1000 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலை அவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். ‘திருக்குறள் உண்மைப் பொருள் ’என்று ஆய்வுநூலை பெரியார், புலவர் குழந்தை , பகுத்தறிவு வழி நின்று எழுதியிருக்கிறார். அந்நூலைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாய்வு நூலுக்குத் தொடக்கமான ‘வள்ளுவரின் மெய்யியல்’ என்ற நூலை புதுச்சேரி இசை, இலக்கண அறிஞர் அய்யா இரா. திருமுருகனார் அவர்களின் ‘பாவலர் பண்ணை’யில் கிடைக்கப் பெற்று வீட்டிற்கு வந்த போதுதான், கு.ச. ஆனந்தன் மறைந்து ஒரு வாரமான செய்தியை அறிந்து, மனமுடைந்தேன்.

வ.உ.சிதம்பரனார் எழுதிய திருக்குறள் உரை நூலைத் தேடியபோதும் உடனடியாக அது கிடைக்கவில்லை. ஒரு பணியின் காரணமாக திருநெல்வேலிச் சென்ற போது சைவசித்தாந்த கழக நூல் நிலையத்தில் அந்நூல் கிடைத்தது. அந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்தேன். அப்போது ஏற்பட்ட உந்துதலில் அவற்றை தொகுத்து சிறிய நூலாக வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன்.

வ.உ.சி அவர்கள் திருக்குறள் உரையை பொருள் (பதவுரை), அகலம் (விளக்கம்,இலக்கணக் குறிப்பு,வினாவிடை, மேற்கோள்) மற்றும் கருத்து என்று மூன்று பிரிவுகளாக எழுதியிருக்கின்றார். அதில் அவர் கூறுகின்றார், ‘எனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன். அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினாவிடை, மேற்கோள், பாட பேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன். கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். உள் உரையைப் படிக்கத் தொடங்கியவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சியில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் படிக்குமாறும், நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்து படிக்குமாறும் வேண்டுகிறோம்’ என்று எனக்கு வழிகாட்டுகிறார். எனவே குறளுக்கான பொருளை மட்டும் தொகுப்பது என்றும், வேண்டிய இடத்தில் அவர் கொடுத்துள்ள விளக்கத்தையும் தொகுப்பது என்றும் முடிவு செய்தேன். அவ்வாறே பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரையையும் தொகுக்க விரும்பினேன்.
இரண்டு நூல்களையும் நாள்தோறும் திருவல்லிக்கேணியில் உள்ள கண்ணகி சிலையின் கீழ் அமர்ந்து எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் ‘பாவேந்தரின் உரை’யில் ஓர் அதிகாரமும் மறுநாள் ‘வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை’யில் ஓர் அதிகாரமும் தொகுத்து எழுதத் தொடங்கினேன். காலை 6 மணி முதல் 8 மணி வரை நாள்தோறும் செய்து வந்தேன். காலையில் இதமான கடற்கரைக் காற்று வீசுகின்ற வேளையில், கதிரவனின் தோற்றமும் ஒளிக் கதிர்களும் மெல்ல வீசத் தொடங்குகின்ற வேளையில், செல்வர்கள் பலரும் நடிகர்களும் என்னைக் கடந்து நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். கதிரவனின் ஒளி வீச்சு அதிகமாக இருக்கும் போது கண்ணகி என்னைக் காத்தாள். இப்படித் தொடங்கிய பணி மூன்று மாதங்கள் தொடர்ந்தது.

சென்னையில் ‘மருத்துவர்’ என்ற சித்த மருத்துவ திங்கள் இதழ் அலுவல கத்தில் பணியாற்றிய போது கணினியில் திருக்குறள் உரையை நானே அச்சடிக்கத் தொடங்கினேன். (அங்குதான் பேராசிரியர் தி.வ. மெய்கண்டார், தமிழில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் மற்றும் தனித்தமிழ் அறிஞர் புதுச்சேரி க. தமிழமல்லன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது). அப்போது புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்களின் நட்பினால் அருகில் இருந்த ‘உலகத் திருக்குறள் மையத்தின்’ நிறுவனர் திரு. மோகனராசு அவர்களின் அறிமுகம் கிடைத்தது. புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்கள் என்னைத் திரு.மோகனராசு அவர்களிடம் அறிமுகப்படுத்தி வ.உ.சி திருக்குறள் உரையையும் பாவேந்தர் திருக்குறள் உரையையும் கையடக்கப் பதிப்பாக நான் வெளியிடயிருப்பதைத் தெரிவித்தார்.

திரு. மோகனராசு அவர்கள் ‘உலகத் திருக்குறள் மைய’ நிகழ்ச்சி விழாவின் போதே அந்நூற்களை வெளியிட அனுமதியளித்து விழா அழைப்பிதழிலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணினியில் தட்டச்சுப் பணி முடிந்து அச்சுக்கு அணியமாக இருந்தும் பொருளாதார நெருக்கடியால் குறித்த காலத்தில் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று. இந்நிகழ்வு என் ஆழ் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.

‘பாவேந்தரின் திருக்குறள் உரையை’ என்னுடைய திருமணத்தின் போது அச்சடித்து வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அளித்தேன்.

புதுச்சேரியில் நான் பணியாற்றிய போது ‘செந்தமிழர் இயக்கத்தின்’ தலைவர் திரு. ந.மு. தமிழ்மணி அவர்கள் மூலம் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரையை வெளியிட விரும்பினேன். அச் சமயம் புதுச்சேரியில் அரசு வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. அவ்விழாவின் போதே வெளியிட விரும்பினேன். குறிப்பிட்ட காலத்தில் அந்த விழா நடைபெற வில்லை.

பின் என்னுடைய சொந்தச் செலவில் ‘வ.உ.சிதம்பரனார் திருக்குறள் உரை’ தொகுப்பு நூலை அச்சடித்து இலவயமாகவே வழங்கி வந்தேன். ‘வெல்லும் தூய தமிழ்’ ஆசிரியர் திரு. க. தமிழமல்லன் அவர்களிடம் நூறு படிகளைக் கொடுத்து அவருடைய பள்ளி மாணவர்களுக்கு வழங்குமாறு கூறினேன்.

இந்த இரு உரை நூல்களையும் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா ஆனா ரூனா அவர்களிடம் அளித்த போது, ‘இனிமேல் நீங்கள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு செய்யவில்லை என்று யாரும் சொல்ல முடியாது’ என்று மனம் மகிழ்ந்து பாராட்டினார்.
சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்த போது சென்னை வானூர்தி நிலையத்தில் ‘வ.உ.சி. நூல் திரட்டு’ என்ற நூலை வாங்கினேன். திரும்பத் திரும்ப அதைப் பார்த்த போதும் அதில் ‘வ.உ .சி. யின் திருக்குறள் உரை’ இணைக்கப்படாததைக் கண்டேன். திருக்குறள் முன்னுரையும் முழுப் பகுதி வெளியிடப்படாமல் அரைகுறையாகவே வெளியிட்டிருந்தார்கள். எனவே மனத்தில் ஓர் எண்ணம் உருவாயிற்று.

இந்த நிலையில் நான் ஒரே திங்களில் தமிழகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், மன அழுத்தம் எனக்கு ஏற்பட்ட போதும், வீட்டில் இருந்த படியே 45 நாள்களில் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை முழுவதையும் கணினியில் தட்டச்சு செய்தேன். திருநெல்வேலியில் நான் வாங்கிய வ.உ.சி.யின் திருக்குறள் உரை நூல் பழைய நூலாக இருந்ததால், பக்கங்கள் எல்லாம் தனித்தனி ஏடாக கிழிந்து போயிற்று. எனவே கடவுள் வாழ்த்து மற்றும் வான்சிறப்பு அதிகாரங்கள் முற்றாகக் கிழிந்து போயிற்று. நீத்தார் பெருமை அதிகாரத்தில் சில குறள்களே கிழியாமல் எஞ்சியிருந்தன. எனவே கிடைத்தவற்றை வைத்து வெளியிட்டுள்ளேன். மேலும் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்றும் வள்ளுவர் இயற்றியதில்லை என்ற கருத்தை வ.உ.சி கொண்டிருந்ததால் அவற்றை இடைப்பாயிரம் என்றே தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார் என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

திருக்குறளை எப்படி படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெரியார் அவர்களின் திருக்குறள் தொடர்பான சொற்பொழிவை யும் திருக்குறளுக்கான வரலாறு என்ன என்பதை அறிய நாவலர் நெடுஞ்செழியனின் சொற்பொழிவையும் இணைத்துள்ளேன்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சிதம்பரனாரின் இந்த எழுத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றை வெளிக்கொணருவதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. தமிழ்ச்சான்றோர்கள், தமிழ் மக்கள் இந்நூலை ஆழ்ந்து படிப்பார்களேயானால் தமிழ் மொழி வரலாறு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இலக்கியங்கள் எவ்வாறு உருமாறி வந்திருக்கின்றன என்ற உண்மையும் புரியும்.

கவி
தொகுப்பாசிரியர்,

வ.உ.சி. திருக்குறள் உரை
பெரியார் பட்டறை
7/11 அலிவலம் சாலை, சுந்தரவிளாகம், திருவாரூர்‡610 001, தமிழ்நாடு